×

தேர்தல் பிரசார கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த 48 மணி நேரத்திற்கு முன் அனுமதி பெற வேண்டும்

*தேர்தல் அலுவலர் உத்தரவு

நாகப்பட்டினம் : தேர்தல் பிரசார கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த 48 மணி நேரத்திற்கு முன் அனுமதி பெற வேண்டும் என மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கிகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கூட்டம் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நாகப்படடினம் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டர் ஜானி டாம்வர்கீஸ் தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:

தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தல் தேதி கடந்த 16ம் தேதி அறிவித்தது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது. இதன்படி நாகப்பட்டினம் நாடாளுமன்றத்தில் பொதுவான நடத்தை விதிமுறைகளாக பல்வேறு சாதி, இனம், மதம், மொழியை சார்ந்த மக்களிடம் வேறுபாடுகளை தீவிரமாக்கும் வகையிலான செயல்களில் ஈடுபடக்கூடாது. ஒருவருக்கு ஒருவர் இடையில் வெறுப்பை உருவாக்கும் வகையில் அல்லது பதற்றத்திற்கு வழிவகை செய்யும் எந்த செயலிலும் எந்தவொரு கட்சியோ வேட்பாளரோ ஈடுபடக்கூடாது. பிற கட்சிகள் மீது விமர்சனம் மேற்கொள்ளும் போது அக்கட்சிகளின் கொள்கைகள், செயல் திட்டங்கள்.

கடந்த காலச் செயல்பாடுகள். நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பான விமர்சனங்கள் மட்டுமே இருக்க வேண்டும். பிற கட்சிகளை சார்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் பொது வாழ்க்கையோடு தொடர்பற்ற சொந்த வாழ்க்கையை பற்றிய விமர்சனங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பிற கட்சியினர் மீதான நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள் மற்றும் முறைகேடுகள் குறித்த விமர்சனங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும். வாக்குகளை பெற இன மற்றும் மத உணர்வுகளை தூண்டும் வகையில் வேண்டுகோள் விடுக்கப்படக் கூடாது. தேர்தல் பிரசார களமாக மசூதி, சர்ச் மற்றும் கோயில் போன்ற வழிபாட்டு தலங்களை ஒரு போதும் பயன்படுத்த கூடாது.

தேர்தல் விதிமுறைகளின்படி வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், வாக்காளர்களை அச்சுறுத்தல், வாக்காளர் ஆள்மாறாட்டம் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. வாக்குச் சாவடிகளிலிருந்து 100 மீட்டர் எல்லைக்குள் தங்களுக்கு வாக்களிக்குமாறு கோருதல், தேர்தல் பரப்புரைக்கான நிறைவு நேரத்திலிருந்து வாக்குப் பதிவு முடிவடைவது வரையிலான 48 மணி நேரத்திற்குள் பொது கூட்டங்கள் நடத்துதல் மற்றும் வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வரவும், திரும்ப அழைத்து செல்லவும் வாகன வசதிகளை ஏற்படுத்தித் தருதல் போன்ற முறைகேடான நடவடிக்கைகளை அனைத்து கட்சிகளும், வேட்பாளர்களும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

ஒரு தனி நபரின் அரசியல் கருத்துகள் அல்லது அரசியல் செயல்பாடுகள் ஆத்திரமூட்டும் வகையில் அமைய நேர்ந்தாலும், அமைதியான, இடர் இல்லாத குடும்ப வாழ்க்கை நடத்துவதற்கான அவரது உரிமை மதிக்கப்பட வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் தனிநபரின் கருத்துகளையும், நடவடிக்கைகளையும் எதிர்த்து போராடும் வகையில் அவர்களின் வீடுகளுக்கு முன்பாக போராட்டங்களிலும் மறியல்களிலும் ஈடுபட கூடாது.

தனி நபருக்கு சொந்தமான இடங்களில், கட்டிடங்களில், சுற்றுச்சுவர்களில் அவர்களின் அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் நடுதல், பதாகை வைத்தல், சுவரொட்டிகளை ஒட்டுதல், பரப்புரை வாசகங்களை எழுதுதல் போன்ற வேட்பாளர்கள் தங்களது செயல்களை செய்ய கூடாது. ஒரே நேரத்தில் ஒரே பாதையிலோ அல்லது அதே பாதையில் பகுதியளவு வருமாறோ இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்ய விரும்பினால், ஊர்வலத்தில் எவ்வித மோதல்களும் இடம்பெறா வண்ணமும், போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தாத வகையிலும் காவல்துறை பார்த்து கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகள் குறித்து முன்கூட்டியே முடிவு செய்து கொள்ள வேண்டும்.

இரு தரப்பினரும் திருப்திகரமாக ஏற்பாடு செய்வதற்காக உள்ளூர் காவல்துறையினரின் உதவியை பெறலாம். இதற்காக அரசியல் கட்சியினர் கூடுமான வரையில் விரைவாக காவல் துறையினரை தொடர்பு கொள்ளலாம். பிரச்சார கூட்டங்கள், ஊர்வலங்கள், தற்காலிக கட்சி அலுவலகங்கள் மற்றும் பிரச்சார வாகனங்களுக்கு அனுமதி பெற கோரும் அரசியல் கட்சிகள், அரசியல் கட்சியின் பிரதிநிதிகள், தங்களது மனுக்களை 48 மணி நேரத்திற்கு முன்பு https://suvidha.eci.gov.in/login இணையதள முகவரியில் விண்ணப்பம் தாக்கல் செய்ய வேண்டும்.

வாக்குப்பதிவு அமைதியாகவும், நேர்மையாகவும் நடந்திட வாக்காளர்கள் எவ்வித தொந்தரவும், இடையூறும் இல்லாது முழுச் சுதந்திரத்துடன் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்திட தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அலுவலர்ளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். ஆட்சி அதிகாரத்திலுள்ள கட்சி மத்தியிலோ, மாநிலத்திலோ அல்லது அந்தந்த மாநிலங்களிலோ, ஆட்சியிலுள்ள கட்சியினர் தங்கள் அலுவலக அதிகாரத்தை, தங்கள் தேர்தல் களப்பணிகளுக்காக பயன்படுத்துவது தொடர்பான குற்ற சாட்டுகளுக்கு எவ்வகையிலும் இடமளிக்கக் கூடாது. ஓய்வில்லங்களும், மாளிகைகளும், அரசுக்கு சொந்தமான தங்குமிடங்களில் ஆளும் கட்சியினர் அதன் வேட்பாளர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவது கூடாது.

பிற கட்சிகளும் வேட்பாளர்களும் முறையாக அவற்றை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்க வேண்டும். ஆனால் எந்தவொரு கட்சியோ, வேட்பாளரோ தேர்தல் அலுவலகமாகவோ தேர்தல் பிரச்சாரத்திற்கான பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கோ இந்த தங்குமிடங்களை அல்லது அவற்றோடு தொடர்புடைய வளாகங்களை பயன்படுத்த கூடாது.

அரசு நிதியைப் பயன்படுத்தி செய்தித்தாள்களிலும் பிற ஊடகங்களிலும் விளம்பரப்படுத்துதல் தேர்தல் நேரங்களில், அரசு ஊடகத் துறையின் வாயிலாக ஒருதலைப்பட்சமான அரசியல் செய்திகளை மட்டும் சேகரிக்க செய்வதும், அரசின் வாய்ப்பு வளங்களை பெருக்கி கொள்வதற்காக அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்துவதும் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் டிஆர்ஓ பேபி, கூடுதல் ஆட்சியர் ரஞ்ஜீத்சிங், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் யாஸ்மின்சகர்பான் (நிலம்), கார்த்திகேயன் (தேர்தல்), ராமன்(பொது), ஏடிஎஸ்பி மகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொன்டனர்.

The post தேர்தல் பிரசார கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த 48 மணி நேரத்திற்கு முன் அனுமதி பெற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Collector ,Officer ,Johny Tom Varghese ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடிநீர்...